305. காஞ்சி திவ்ய தேசப் பயணம் - Part 2
புனித யாத்திரையின் இரண்டாவது சுற்றை நான்கு மணிக்கு, திருக்காஞ்சியிலிருந்து தொடங்கினோம். காஞ்சி புனித யாத்திரையின் முதல் சுற்று குறித்து இங்கே எழுதியிருக்கிறேன்.
மூலவரை தரிசிக்க நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர். வரதர் கோயிலில் பணி புரியும்
அன்பர் ஒருவரின் தயவால், தரிசனம் சீக்கிரம் கிடைத்தது. நான்முகன் இங்கு பெருமாளை
வழிபட்டதால், இத்தலம் அத்திகிரி என்று அறியப்பட்டு, மருவி, கச்சி என்றும் பின் காஞ்சி என்றும் அழைக்கப்படுகிறது.
வரதர் வேட்டைப் பெருமாளாக கையில் வில்லுடன் !!!
மூலவர் கஜேந்திர வரதரை 25 ஆண்டுகளுக்குப் பின் தரிசித்தது, நிச்சயம் ஒரு மகிழ்தருணம், ஆனந்த
அனுபவமும் கூட. தாயார் பெருந்தேவி நாச்சியார். இங்குள்ள தங்கபல்லி விசேஷம் ! ....கோயிலில் சுவையான புளியோதரையும், வடையும் கிடைத்தது
இங்குள்ள ஆயிரங்கால் மண்டபத்துத் தூண்களில் நுணுக்கமாக செதுக்கப்பட்ட அழகிய சிற்ப வடிவங்கள் பிரசித்தி பெற்றவை.
நாற்பது வருடங்களுக்கு ஒரு முறை, திருக்குளத்து அடியிலிருந்து வெளிவந்து பக்தர்களுக்கு தரிசனம் தரும் 'அத்திவரதப்' பெருமாளை, 30 ஆண்டுகளுக்கு முன் பள்ளியில் பயிலும் காலத்தில், 6 மணி நேரம் வரிசையில் நின்று சேவித்தது ஞாபகத்தில் நிழலாடியது. ஏழ்மையிலும், கவலையில்லாத சந்தோஷமான காலமது !
பெருமை மிக்க திருக்காஞ்சியை திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளனர். முந்தைய பதிவில் இடம் பெற்ற சில பாசுரங்களைத் தவிர்த்திருக்கிறேன்.
திருமங்கையாழ்வார்
2050@..
பிண்டியார் மண்டை ஏந்திப் * பிறர்மனை திரிதந்துண்ணும்-
உண்டியான்* சாபம் தீர்த்த ஒருவனூர்,* உலக மேத்தும்-
கண்டியூர் அரங்கம் மெய்யம் * கச்சிபேர் மல்லை என்று-
மண்டினார்,* உய்யல் அல்லால் * மற்றையார்க்கு உய்யலாமே? (2)
2066@
கல்லுயர்ந்த நெடுமதிள்சூழ் கச்சி மேய-
களிறு என்றும்* கடல்கிடந்த கனியே. என்றும்,*
அல்லியம்பூ மலர்ப்பொய்கைப் பழன வேலி*
அணியழுந்தூர் நின்றுகந்த அம்மான் என்றும்,*
சொல்லுயர்ந்த நெடுவீணை முலைமேல் தாங்கித்*
தூமுறுவல் நகைஇறையே தோன்ற நக்கு,*
மெல்விரல்கள் சிவப்பெய்தத் தடவி ஆங்கே*
மென்கிளிபோல் மிகமிழற்றும் என்பேதையே. 15
பூதத்தாழ்வார்
2276:
என்னெஞ்சம் மேயான்* என் சென்னியான்,* தானவனை-
வன்னெஞ்சம்* கீண்ட மணிவண்ணன்,* முன்னம்சேய்-
ஊழியான்* ஊழி பெயர்த்தான்,* உலகேத்தும்-
ஆழியான்* அத்தியூரான். 95
2277@..
அத்தியூரான்* புள்ளை ஊர்வான்,* அணிமணியின்-
துத்திசேர்* நாகத்தின் மேல்துயில்வான்,* - மூத்தீ-
மறையாவான்* மாகடல் நஞ்சுண்டான் தனக்கும்*
இறையாவான் எங்கள் பிரான். (2)
பேயாழ்வார்
2307@
சிறந்த என் சிந்தையும் செங்கண் அரவும்,*
நிறைந்தசீர் நீள்கச்சி உள்ளும்,* - உறைந்ததுவும்,
வேங்கடமும் வெ·காவும்* வேளுக்கைப் பாடியுமே,*
தாம்கடவார் தண் துழாயார்.
தெற்கு மாடவீதியில் நான் வாழ்ந்த பழைய வீட்டை பார்க்க ஆசைப்பட்டு, காரில் ஒரு ரவுண்ட்
அடித்தோம். காலப்போக்கில் ஏற்பட்ட மாற்றங்களால், என்னாலேயே எங்கள் வீட்டை கண்டுபிடிக்க முடியவில்லை ! இடித்துக் கட்டப்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன். சில வயதானவர்களை விசாரித்தும் பயனில்லை. காது சற்று மந்தமான அவர்களுக்குப் போராடி புரிய வைப்பதற்குள், என் தொண்டை புண்ணானது தான் மிச்சம் :)
*************************************
அடுத்து, சொன்ன வண்ணம் செய்த பெருமாள் (யதோக்தகாரி) எழுந்தருளியிருக்கும்
திருவெ·கா தலத்துக்குச் சென்றோம்.
உத்சவ மூர்த்தி மிக்க அழகுடன், கம்பீரமாய் காட்சியளிக்கிறார். பெருமாள் இப்பெயர் பெறுவதற்குப் பின்னால் ஒரு சுவையான பழங்கதை ஒன்று உண்டு !
திருமழிசையாழ்வாருக்கு கணிகண்ணன் என்ற சிஷ்யர் இருந்தார். ஒரு சமயம், பல்லவராயன் என்ற காஞ்சி மன்னன், கணிகண்ணனை தன்னைப் புகழ்ந்து கவி பாடுமாறு கேட்க, அவர் அதை மறுத்து, திருவெ·காவைப் போற்றி ஒரு கவி பாட, சினங்கொண்ட கொற்றவன், அவரை நகரை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டான். ஆழ்வாரிடம் விடைபெறப் போன கணிகண்ணனிடம், 'நானும் பெருமாளைக் கூட்டிக் கொண்டு உன்னுடன் வெளியேறுகிறேன்' என்று சொன்ன ஆழ்வார், திருவெ·கா கோயில் சென்று, பெருமாளைத் தொழுது,
கணிகண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்க வேண்டா - துணிவுடைய
செந்நாப் புலவனும் போகின்றேன் நீயுமுன்றன்
பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள்
என்று வேண்டவே, பெருமாளும் யோக நித்திரை விட்டெழுந்து, அம்மூவரும் (பெருமாள், ஆழ்வார்,
கணிகண்ணன்) அவ்வூரை விட்டு அகன்று, அருகில் உள்ள ஓர் ஊருக்கு சென்று தங்கினர். இதனால், காஞ்சி முழுதும் ஒளியிழந்து, இருள் சூழ்ந்த நகரமாயிற்று. தன் தவறை உணர்ந்த அரசன் தன் மந்திரிமாரோடு கணிகண்ணனிடம் சென்று தன்னை மன்னித்து மீண்டும் காஞ்சி நகருக்கு வருமாறும் வேண்டினான். கணிகண்ணன் ஆழ்வாரை நோக்க, அவரும் அதற்கு ஒப்பி, சேஷசாயிப் பெருமானை நோக்கி,
கணிகண்ணன் போக்கொழிந்தான் காமரு பூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்க வேண்டும் - துணிவுடைய
செந்நாப் புலவனும் போக்கொழிந்தேன் நீயுமுன்றன்
பைந்நாகப் பாய் படுத்துக் கொள்
என்று முன்பு பாடிய பாட்டை மாற்றிப் பாடி வேண்ட, எம்பெருமான் அதற்கும் உடன்பட்டு, ஆழ்வாரும் கணிகண்ணனும் உடன்வர திருவெ·காவில் மீண்டெழுந்தருளினார். மூவரும் சென்று, ஓர் இரவு தங்கியிருந்த கிராமமானது, 'ஓரிரவிருக்கை' என்ற பெயர் பெற்று, பின் மருவி, ஓரிக்கை என்று இப்போது அழைக்கப்படுகிறது.
ஆழ்வார் மேலுள்ள அபிமானத்தால், தான் இவ்வாறு திருவெ·கா விட்டு விலகி, பின் மீண்டும் அக்கோயிலுள் பிரவேசித்த நிகழ்வை, தன்னை சேவிக்க வரும் அடியார்கள் அறிந்துணர வேண்டும் என்பதற்காக, வெளியேறுவதற்கு முன் வலக்கை கீழிருந்தவாறு கிடந்த எம்பெருமான், மீள்வருகைக்குப் பின், இடக்கையை தலைக்குக் கீழ் வைத்த சயன திருக்கோலத்தில் காட்சி தரலானார் ! 27 திவ்யதேசங்களில் கிடந்த திருக்கோலத்தில் அருள் பாலிக்கு பெருமாள், திருவெ·காவில் மட்டுமே, இடக்கை கீழிருக்க யோக நித்திரையில் உள்ளார்.
சிறப்பு மிக்க திருவெ·காவை திருமங்கையாழ்வார் திருமழிசையாழ்வார் பொய்கையாழ்வார் பேயாழ்வார் நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளனர்.
திருமங்கையாழ்வார்
1854:
கூந்தலார் மகிழ்* கோவலனாய்* வெண்ணெய்-
மாந்தழுந்தையில்* கண்டு மகிழ்ந்துபோய்*
பாந்தள் பாழியில்* பள்ளி விரும்பிய*
வேந்தனைச் சென்று காண்டும்* வெ·காவுளே
2065@
முளைக்கதிரைக் குறுங்குடியுள் முகிலை* மூவா-
மூவுலகும் கடந்து அப்பால் முதலாய் நின்ற,*
அளப்பரிய ஆரமுதை அரங்கம் மேய-
அந்தணனை* அந்தணர்தம் சிந்தை யானை,*
விளக்கொளியை மரதகத்தைத் திருத்தண்காவில்*
வெ·காவில் திருமாலைப் பாடக் கேட்டு*
வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக. என்று*
மடக்கிளியைக் கைகூப்பி வணங்கினாளே.
திருமழிசையாழ்வார்
2417@..
நாகத்தணைக் குடந்தை* வெ·கா திருவெவ்வுள்*
நாகத்தணை அரங்கம் பேரன்பில்*
நாகத்தணைப் பாற்கடல் கிடக்கும்* ஆதி நெடுமால்*
அணைப்பார் கருத்தன் ஆவான்.
பொய்கையாழ்வார்
2158@
வேங்கடமும்* விண்ணகரும் வெ·காவும்,* அ·காத-
பூங்கிடங்கில் நீள்கோவல் பொன்னகரும்,* - நான்கிடத்தும்-
நின்றான் இருந்தான்* கிடந்தான் நடந்தானே,*
என்றால் கெடுமாம் இடர்.
பேயாழ்வார்
2345:
இசைந்த அரவமும்* வெற்பும் கடலும்,*
பசைந்தங்க அமுது படுப்ப,* - அசைந்து
கடைந்த வருத்தமோ* கச்சி வெ·காவில்,*
கிடந்திருந்து நின்றதுவும் அங்கு?
2357@
பொருப்பிடையே நின்றும்* புனல்குளித்தும்,* ஐந்து
நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா* - விருப்புடைய
வெ·காவே சேர்ந்தானை* மெய்ம்மலர்தூய்க் கைதொழுதால்,*
அ·காவே தீவினைகள் ஆய்ந்து.
நம்மாழ்வார்
2503@
நானிலம் வாய்க்கொண்டு* நன்னீரறமென்று கோதுகொண்ட,*
வேனிலஞ் செல்வன் சுவைத்துமிழ் பாலை,* கடந்தபொன்னே.-
கால்நிலந் தோய்ந்து விண்ணோர் தொழும் கண்ணன் வெ· காவுது* அம்பூந்-
தேனிளஞ் சோலை அப்பாலது,* எப்பாலைக்கும் சேமத்ததே.
***********************************
அங்கிருந்து, அருகிலேயே இருந்த அஷ்டபுயகரப் பெருமாள் கோயிலுக்குச் சென்றோம். எட்டு
திருக்கரங்களுடன், நின்ற திருக்கோலத்தில் ஆதிகேசவப் பெருமாள் கம்பீரமான அழகுடன் காட்சியளிக்கிறார். வலக்கரங்களில் பாஞ்சஜன்யம், கத்தி, தாமரை, வில்லுடனும், இடக்கரங்களில் சங்கு, பாணம், கேடயம் மற்றும் கதாயுதத்துடனும் காட்சி தரும் மூலவரை கண் குளிர சேவித்தோம் ! இப்பெருமான் வேங்கட ரூபமாய் அறியப்படுவதால், கோயில் தாயாருக்கு அலர்மேல் மங்கை (பத்மாசினி) என்று திருநாமம்.
இத்திருத்தலத்தை திருமங்கையாழ்வார், பேயாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளனர்.
1119@
வெந்திறல் வீரரில் வீரரொப்பார்* வேதம் உரைத்து இமையோர் வணங்கும்*
செந்தமிழ் பாடுவார் தாம்வணங்கும்* தேவர் இவர்கொல் தெரிக்கமாட்டேன்*
வந்து குறளுருவாய் நிமிர்ந்து* மாவலி வேள்வியில் மண்ணளந்த*
அந்தணர் போன்று இவரார்க்கொல்? என்ன* அட்ட புயகரத்தேனென்றாரே.
1122.
கலைகளும் வேதமும் நீதிஞூலும்* கற்பமும் சொற்பொருள் தானும்* மற்றை
நிலைகளும் வானவர்க்கும் பிறர்க்கும்* நீர்மையினால் அருள் செய்து* நீண்ட
மலைகளும் மாமணியும்* மலர்மேல் மங்கையும் சங்கமும் தங்குகின்ற*
அலைகடல் போன்று இவரார்க்கொல் என்ன* அட்டபுயகரத்தேனென்றாரே.
2380...
தொட்ட படையெட்டும்* தோலாத வென்றியான்,*
அட்ட புயகரத்தான் அஞ்ஞான்று,* - குட்டத்துக்
கோள்முதலை துஞ்சக்* குறித்தெறிந்த சக்கரத்தான்*
தாள் முதலே நங்கட்குச் சார்வு. (2)
**********************************************
என்றென்றும் அன்புடன்
பாலா
*** 305 ***
8 மறுமொழிகள்:
Test comment
2:40க்கு போட்டோ புடிச்சீங்க போல இருக்கு. அப்புறம் 4 மணிக்கு கிளம்பினோம்னு சொல்றீங்க. ஆ.. நாங்க ஏமாறமாட்டோம்.. விளயாட்டு கிடக்கட்டும். தொடர் கட்டுரை நல்லா இருக்கு. Please continue..
S
கச்சிக்கு சென்று பதிக்கு பதிலாக பதிவிட்ட பாலா,
பதிவெங்கிலும்
படமும் பாசுரங்களாலும்
நிறைத்துவிட்டீர்,
மிக்க மகிழ்சி!
S,
THanks ! I took the photos of "AyirangkaAl mandapam" in the A/N. But the temple was still not OPEN :)
Jeeva,
Thanks for the visit and appreciation !
கட்டுரைத்தொடர் நல்லா இருக்கு பாலா.நன்றி
Thanks, Selvan !
Can you enlighten me on the two veNpAs regarding the episode of kaNikaNNan and painAgappAy? Are they just a figment of somebody's imagination upon seeing the reversal of the pose of the perumAL with imagination running riot? Those two were not written by the AzhwAr since they are not found in NDP.
nAradA,
Thanks for your comment.
As you know, there exists no proof for mythological stories! Its belief !
FYI, those 2 were written by thirumazhisai AzwAr, but they are not part of NDP composed by nAdhamunigaL.
Post a Comment